டெஹ்ரான் / வாஷிங்டன்:
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தங்கள் நாட்டு அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் ஏபிடபிள்யூஎஸ் (Amazon Web Services – AWS) மேகக்கணி (Cloud) தரவு மையங்களைக் குறிவைத்து ஈரான் சைப்ர தாக்குதலை முடக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைபர் தாக்குதலின் பின்னணி:
சமீபத்தில் ஈரானின் முக்கிய அணுமின் நிலைய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் உளவு அமைப்புகள் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் ‘AWS’ தரவு மையங்கள் மற்றும் கிளவுட் சேவைகளை முடக்கும் வகையில் ஈரான் ஆதரவு ஹேக்கர் குழுக்கள் அதிநவீன சைபர் தாக்குதல்களை (Cyber Attacks) முன்னெடுத்துள்ளன.
உலகளவில் எதிரொலிக்கும் தாக்கம்:
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான முக்கிய நிதி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் வணிக அமைப்புகள் அமேசான் AWS சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த சைபர் தாக்குதல் உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்பில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தப் போரானது நிலம் மற்றும் வான்வழித் தாக்குதல்களையும் தாண்டி, சர்வதேச டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைப் பாதிக்கும் “சைபர் போராக” (Cyber Warfare) உருவெடுத்துள்ளது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


