சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்சேய் நலன் / தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்’ ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளியான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் விரிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின் முக்கியத் தெளிவுரைகள்:
- திட்டத்தின் பின்னணி: அரசாணை எண் 166 (நாள்: 23.06.2026)-ன் படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 22 காரட் (916 BIS Hallmarked) 1 கிராம் தங்க மோதிரம் வழங்கத் திட்டமிடப்பட்டது.
- டெண்டர் நடைமுறை:
- தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் திறந்தவெளி டெண்டர் கோரப்பட்டது.
- இதில் தங்கத்தின் விலை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களுக்கு மட்டுமே நிறுவனங்களிடம் விலை புள்ளி கேட்கப்பட்டது.
- தங்கத்தின் விலையானது கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் நாளன்று நிலவும் “IBJA AM Rate” அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
- டெண்டரில் வென்ற நிறுவனங்கள்:
- 11 நிறுவனங்கள் பங்கேற்றதில், செய்கூலி மற்றும் இதர செலவுகளுக்கு ரூ. 0.01 எனப் பதிவு செய்து ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் L1 ஆகத் தேர்வானது.
- L1 விலைக்குச் சம்மதம் தெரிவித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers – L9) நிறுவனத்திற்கும் விதபடி பங்கு அளிக்கப்பட்டது.
- கொள்முதல் பங்கு (70:30):
- தமிழ்நாடு திறந்தவெளி டெண்டர் விதிகள் 31(4)-ன் படி 70:30 என்ற விகிதத்தில் ஜோய் ஆலுக்காஸ் (70%) மற்றும் கல்யாண் நிறுவனத்திற்கு (30%) கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- நிதி மற்றும் ஊழல் மறுப்பு:
- ரூ.755.83 கோடி என்பது நிர்வாக ஒப்புதல் தொகை மட்டுமே; தற்போதைய நிதி ஒதுக்கீடு ரூ.560 கோடி ஆகும்.
- ரூ. 0.01 என்பது செய்கூலி/சேவைச் செலவு மட்டுமே தவிர தங்கத்தின் மொத்த விலை அல்ல. எனவே இன்றைய தங்க விலையை வைத்து ரூ.136 கோடி ஊழல் எனக் கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.


