சென்னை:
‘தளபதி’ விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், மேடை ஒன்றில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துச் சில விமர்சனங்களை முன்வைத்த மறுநாளே, படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் பேட்டியில் கூறியது:
“பிரகாஷ் ராஜ் சார் ஒரு பொது மேடையில் விஜய்யைப் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் விஜய்யும் பிரகாஷ் ராஜ் சாரும் ஒரே காட்சியில் இணைந்து நடிக்க வேண்டிய சூழல் வந்தது.
படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இருவருக்கும் இடையே ஒருவித தயக்கமோ அல்லது சலசலப்போ இருக்கும் என்று ஒட்டுமொத்தப் படக்குழுவும் எதிர்பார்த்தது. ஆனால், தளத்திற்கு வந்த விஜய், வழக்கம்போலப் பிரகாஷ் ராஜ் சாரைக் கட்டியணைத்து மிகவும் இயல்பாக நலம் விசாரித்தார். பிரகாஷ் ராஜ் சாரும் புன்னகையோடு உரையாடினார்.
சித்தாந்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தொழிலையும் தனிப்பட்ட நட்பையும் விஜய் எவ்வளவு நேர்த்தியாகக் கையாள்கிறார் என்பதற்கு அந்த நிகழ்வு மிகப்பெரிய உதாரணம்” என்று ஹெச். வினோத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
‘கில்லி’, ‘சிவகாசி’, ‘வில்லு’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து விஜய்யும் பிரகாஷ் ராஜும் ‘ஜனநாயகன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


