சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்துப் புதிய த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெறும் அரசியல் நாடகம் என்று சாடியுள்ள திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, த.வெ.க. அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும்போது மாநிலத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்று அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அண்மையில் வெளியிட்டுள்ள நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில் கடன்கள் இருமடங்கு அதிகரித்துத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தங்கம் தென்னரசு பேசியதாவது:

“தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, தாங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. தங்களின் நிர்வாகத் திறமையின்மையையும், ஏமாற்றங்களையும் பொதுமக்களிடம் இருந்து மறைப்பதற்காகவே இந்த ‘வெள்ளை அறிக்கை’ என்ற வெற்றுப் பேப்பரை வெளியிட்டு நாடகமாடுகிறார்கள். மக்கள் தங்களை நோக்கித் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே, முந்தைய திமுக அரசு மீது பழிபோடப் பார்க்கிறார்கள்.”

வரலாற்று ரீதியாகத் தமிழ்நாட்டின் கடன் விகிதங்கள் குறித்துப் புள்ளிவிவரங்களுடன் அவர் விளக்கியதாவது:

“தமிழ்நாட்டின் நிதி வரலாற்றைப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் கடன் என்பது முந்தைய ஆட்சியை விட இருமடங்காக அதிகரிப்பதுதான் இயல்பு. 2006-ல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கடன் ரூ.57,000 கோடியாக இருந்தது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அது ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2021-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட்டுச் செல்லும்போது கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்தது. தற்போதைய சூழலில் அது ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

வரலாற்று ரீதியாகக் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நான் தற்போதைய த.வெ.க. அரசுக்கு ஒரு திறந்த சவால் விடுகிறேன். த.வெ.க. அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும்போது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் விகிதம் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.”

பதவி ராஜினாமா சவால்: தொடர்ந்து த.வெ.க. நிதியமைச்சகத்திற்குப் புதிய சவால் ஒன்றை விடுத்த அவர்:

“திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட சராசரி கடனை விட, த.வெ.க. அரசு தங்களது நிதியாண்டுகளில் குறைவான கடனை வாங்கி, தாங்கள் அறிவித்த திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டட்டும். எங்களை விடக் குறைவாகக் கடன் வாங்கி, நிதி மேலாண்மையை மேம்படுத்திக் காட்டிவிட்டால், நான் எனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை உடனடியாக ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் பொதுமக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் காரணமாகவே மின்துறையில் கூடுதல் கடன் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட தங்கம் தென்னரசு, கடந்த காலங்களில் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் நிதிப் பங்கீடுகள் சரியாக வராததே மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறைக்கு முதன்மைக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நிதிநிலை தொடர்பாக எழுந்துள்ள இந்த வார்த்தைப்போர் கோலிவுட் மற்றும் கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version