ஆக்லாந்து:

எஃப்.ஐ.ஹெச் (FIH) மகளிர் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் பூல்-ஏ (Pool A) பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணி கம்பீரமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு 17-வது இடத்தில் உள்ள உருகுவே கடுமையான சவால் அளித்தது.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்திலேயே உருகுவே வீராங்கனை கியாரா அபெனினோ ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய வீராங்கனைகள், ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினர். இதன் பலனாக 24-வது நிமிடத்தில் இந்தியாவின் நட்சத்திர டிராக்-பிளிக்கர் தீபிகா செஹ்ராவத் அபாரமாக ஒரு பெனால்டி கார்னரை கோலாக்கி ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது குவாட்டரில், 43-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா சோரெங் ஒரு கண்கவர் ஃபீல்டு கோல் அடித்து இந்தியாவை 2-1 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் போட்டி மேலும் சூடுபிடித்தது. 55-வது நிமிடத்தில் உருகுவே அணியின் கேப்டன் மானுவேலா விலார் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும், அடுத்த நிமிடமே (56-வது நிமிடம்) இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா செஹ்ராவத் மீண்டும் ஒரு கோலாக மாற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வீழ்த்தியது. இந்த ஆட்டம் இந்திய மிட்ஃபீல்டர் நேஹாவின் 200-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. குரூப் சுற்றில் அமெரிக்கா, ஜப்பான், உருகுவே ஆகிய மூன்று அணிகளையும் வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி, சனிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சிலி (Chile) அணியை எதிர்கொள்ள உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version