புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) முடங்கிக் கிடக்கும் கணக்குகள் மற்றும் அதில் உள்ள தொகைகள் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
முடங்கிய கணக்குகளும்.. கோடிக்கணக்கானப் பணமும்:
சமீபத்தில் பெறப்பட்ட ஆர்டிஐ (RTI) பதிலின்படி, கடந்த மார்ச் 31, 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 30.91 லட்சம் (கிட்டத்தட்ட 31 லட்சம்) இபிஎஃப் கணக்குகள் செயல்பாடற்றுக் (Inoperative Accounts) கிடக்கின்றன.
மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த முடங்கிக் கிடக்கும் கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத ஒட்டுமொத்த தொகை மட்டும் ₹9,330 கோடி ஆகும்!
இந்தத் தொகையை எதனுடன் ஒப்பிடலாம்?
₹9,330 கோடி என்பது எவ்வளவு பெரியத் தொகை என்பதைப் பொதுமக்களுக்குப் புரியவைக்கப் பொருளாதார வல்லுநர்கள் சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்:
- மத்திய அரசு நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தை இணைக்கக் கொண்டு வந்த ‘உதான்’ (UDAN) திட்டத்திற்கு 2016 முதல் இதுவரை செலவிட்ட தொகைக்கு (சுமார் ₹10,169 கோடி) இது சமமாகும்.
- தற்போதைய பணவீக்கக் கணக்குப்படி, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 3 புதிய ஐஐடி (IIT) கல்வி நிறுவனங்களை இந்தத் தொகையைக் கொண்டு முழுமையாகக் கட்டிமுடிக்க முடியும்.
கடந்த ஆண்டை விடக் குறைவு:
இருப்பினும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்றுக் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மார்ச் 31, 2025 அன்று 31.83 லட்சம் கணக்குகளில் ₹10,181 கோடி முடங்கிக் கிடந்தது. தற்போது இபிஎஃப்ஓ (EPFO) மேற்கொண்டு வரும் டிஜிட்டல் விழிப்புணர்வு காரணமாக முடங்கிய கணக்குகளின் எண்ணிக்கை 92,000 ஆகவும், தொகை ₹851 கோடியாகவும் குறைந்துள்ளது.
கணக்குகள் முடங்குவது ஏன்?
ஒரு பணியாளர் தனது வேலையை மாற்றும்போது பழைய பிஎஃப் கணக்கை புதிய கணக்குடன் இணைக்கத் தவறுவது, அல்லது ஓய்வு பெற்ற பிறகும் 36 மாதங்களுக்கு மேல் கணக்கிலிருந்து பணத்தை எடுக்காமல் விடுவது போன்ற காரணங்களால் இந்தக் கணக்குகள் ‘செயல்பாடற்றவை’ என முடக்கப்படுகின்றன.
சமீபத்தில் ஜூன் 29 முதல் புதிய “இபிஎஃப் திட்டம் 2026” (EPF Scheme 2026) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இபிஎஃப்ஓ அமைப்பு ₹1,000-க்குக் கீழ் உள்ள சிறிய தொகைகளைத் தானியங்கி முறையில் (Auto-settlement) பயனர்களின் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டங்களையும் சோதனை முறையில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


