தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘லோக் போல்’ (Lok Poll) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கணிப்பின்படி, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஒருமுறை அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்கள் வரை கைப்பற்றி இமாலய வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி 38 முதல் 42 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மக்களிடையே உள்ள ஆதரவே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றி க் கழகம் உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவு இருந்தாலும், திமுகவின் வாக்கு வங்கி வலுவாக இருப்பதை இக்கணிப்பு உறுதி செய்கிறது. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது கணிப்புகள் நிஜமாகுமா என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

