சென்னை:

அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்பவர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்தி, அவர்களின் வங்கிப் பணத்தைச் சுருட்டும் புதிய பாணி சைபர் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பார்சல் பெட்டிகளைப் பயன்படுத்திய பிறகு, அப்படியே குப்பையில் தூக்கி வீசுவது வழக்கம். ஆனால், இந்தச் சாதாரணச் செயல் நமக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

மோசடி நடப்பது எப்படி?

  • தனிப்பட்ட விவரங்கள் கசிவு: ஆன்லைன் பார்சல் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் டெலிவரி ஸ்டிக்கரில் நமது பெயர், முழு வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
  • போலி கஸ்டமர் கேர் கால்ஸ்: குப்பையில் வீசப்படும் பெட்டிகளில் இருந்து இந்த விவரங்களைச் சேகரிக்கும் மோசடி நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்களைத் தொடர்புகொண்டு தாங்கள் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் (Fake Customer Care) பேசுவதாக நம்ப வைக்கின்றனர்.
  • போலி லிங்குகள் மூலம் திருட்டு: “உங்களுக்குக் கூடுதல் தள்ளுபடி (Discount), கேஷ்பேக் (Cashback) அல்லது ரிவார்டு கிடைத்துள்ளது” என்று கூறி போலி லிங்குகளை (Fake Links) மொபைலுக்கு அனுப்புகிறார்கள்.
  • பணம் பறிபோகும் அபாயம்: அந்தப் போலி லிங்குகளைக் கிளிக் செய்ய வைத்து, அதன் மூலம் வங்கி கணக்கு விவரங்கள், லாகின் தகவல்கள் மற்றும் ஓடிபி (OTP) ஆகியவற்றைப் பெற்று நொடியில் பணத்தைத் திருடி விடுகின்றனர்.

தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

  • விவரங்களைக் கிழிக்கவும்: ஆன்லைன் பார்சல் பெட்டிகளைத் தூக்கி வீசுவதற்கு முன்னால், அதில் ஒட்டப்பட்டிருக்கும் டெலிவரி ஸ்டிக்கரில் உள்ள உங்களது பெயர், முகவரி, போன் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கிழித்தோ அல்லது மை (Ink) கொண்டு அழித்தோ முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாற்ற வேண்டும்.
  • லிங்குகளைத் தவிர்க்கவும்: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் எந்தவொரு கேஷ்பேக் அல்லது ஆஃபர் லிங்குகளையும் கிளிக் செய்யக் கூடாது.
  • ரகசியம் காக்கவும்: யாருக்கும் உங்களது வங்கி விவரங்களையோ அல்லது மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) எண்களையோ பகிரக் கூடாது.

உஷாரா இருங்க மக்களே… ஆன்லைன் பார்சல் வாங்குனா பெட்டியைத் தூக்கிப் போடுறதுக்கு முன்னாடி ஸ்டிக்கரைக் கிழிக்க மறக்காதீங்க!

Share.
Leave A Reply

Exit mobile version