சென்னை: அதிமுகவின் மூந்திய மூத்த அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் சி.வி.சண்முகம் (CVS) ஆகிய இருவருக்கு இடையேயான உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்-ஐ சந்திக்க மறுக்கும் சண்முகம்:

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவிற்குள் நிலவி வந்த அதிருப்தி குழுக்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின. இதில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அடங்கிய அதிருப்தி அணியில் இருந்த பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் முகாமிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனது அதிருப்தி அரசியல் நகர்வுகளுக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிக்கச் சி.வி.சண்முகம் தொடர்ந்து மறுத்து வருகிறார். இபிஎஸ்-இடம் சமரசம் செய்துகொள்ளத் தனக்கு விருப்பமில்லை என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ராஜினாமா முடிவா?

தனது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தம்மைக் கைவிட்டு இபிஎஸ் பக்கம் சென்றதாலும், கட்சியின் தலைமை மீதுள்ள அதிருப்தியாலும் விரக்தியடைந்துள்ள சி.வி.சண்முகம், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாகத் தீவிரத் தகவல்கள் கசிந்துள்ளன. (முன்னதாக இவர் தனது மாநிலங்களவை எம்பி பதவியையும் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

தொடர்ந்து அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகள் சரிந்து வரும் வேளையில், வட தமிழகத்தில் கட்சியின் வலுவான முகமாக இருக்கும் சி.வி.சண்முகமும் ராஜினாமா முடிவை எடுத்தால் அது அதிமுகவிற்குப் பேரிடியாக அமையும் என்பதால், கட்சித் தலைமை அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version