வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) ஈடுபட்டிருந்த பெண்களிடம், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதியில், இன்று வழக்கம்போல் 50-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏரிக்கரை மற்றும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு மிகக் கடுமையான மதுபோதையில் வந்த உள்ளூர் ஆசாமி ஒருவர், பணியில் இருந்த பெண்களிடம் வம்பு இழுத்ததுடன், அநாகரிகமான வார்த்தைகளால் பேசி சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் பெண்கள் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளனர். ஆனால், போதை தலைக்கேறியிருந்த அந்த நபர் தொடர்ந்து பெண்களிடம் எல்ல மீறி அநாகரிகமாக நடந்துகொண்டதால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர்.

பொதுமக்கள் தர்ம அடி: பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமியை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், அவருக்கு அங்கேயே ‘தர்ம அடி’ கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து உடனடியாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போதை ஆசாமியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகற்பொழுதில், அரசு திட்டத்தின்கீழ் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்ய முயன்ற நபரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் உரியப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version