புதுடெல்லி: இந்திய எல்லைக்கு மிக அருகில், திபெத்தின் யார்துங் சாங்போ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்ட அணையை கட்டும் பணிகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த ‘வாட்டர் பாம்’ (Water Bomb) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய அரசும் அசாமையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

சீனாவின் மெகா அணைத் திட்டம்: அருணாச்சலப் பிரதேச எல்லையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திபெத்தின் ‘கிரேட் பெண்ட்’ (Great Bend) பகுதியில் சீனா இந்த அணையை அமைத்து வருகிறது. சுமார் 167 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாகும் இந்த அணை, சீனாவின் புகழ்பெற்ற ‘முந்நீர் பள்ளத் தாக்கு’ (Three Gorges Dam) அணையை விட மூன்று மடங்கு பெரியதாகும். இதன் மூலம் சுமார் 60 கிகாவாட் (GW) மின்சாரம் தயாரிக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கவலை என்ன? பிரம்மபுத்திரா நதி வடகிழக்கு இந்திய மாநிலங்களான அருணாச்சலம் மற்றும் அசாம் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. சீனா மேல்மட்டப் பகுதியில் அணையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், பின்வரும் பேராபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது:

  • கோடைகாலத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் தண்ணீரின் அளவைச் சீனா முற்றிலும் குறைக்கலாம்.
  • பருவமழைக் காலங்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான தண்ணீரைத் திறந்துவிட்டு, அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் செயற்கையான பெருவெள்ளத்தை (Flash Floods) உருவாக்கலாம்.

இந்தியாவின் அதிரடிப் பதில் திட்டம் (Counter-Strategy): சீனாவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தூதரக ரீதியாகக் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அதே நேரத்தில் தற்காப்பு நடவடிக்கையாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் நதியின் குறுக்கே ‘மேல் சியாங் பன்னோக்கு சேமிப்புத் திட்டம்’ (Siang Upper Multipurpose Project) என்ற பிரம்மாண்ட அணையைத் திட்டமிட்டுள்ளது.

  • பப்பராகச் செயல்படும் அணை: 11,200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இந்த இந்திய அணை, சீனா திடீரெனத் தண்ணீரைத் திறந்துவிட்டால் அதைத் தேக்கி வைக்கும் ஒரு ‘பப்பர்’ (Buffer) அரணாகச் செயல்படும்.
  • பாதுகாப்பு அரண்: இதன் மூலம் சீனாவால் ஏற்படக்கூடிய திடீர் வெள்ள அபாயத்தைத் தடுத்து, வடகிழக்கு இந்திய மக்களின் நீர் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இந்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீன எல்லையோரப் பகுதிகளில் அதிநவீன செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் நதி நீர் ஓட்டத்தைக் கணிக்கும் தொழில்நுட்பக் கருவிகளையும் இந்தியா தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version