சென்னை:

சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை அநாவசியமாகத் துன்புறுத்தக் கூடாது என்றும், புதிய வழக்குகளில் விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் முன்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடக் கோரியும் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர். வி. அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்:

  • “ஏற்கெனவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் எங்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
  • எனினும், ஏதேனும் ஒரு வழக்கில் எங்களைக் கைது செய்யக் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கும் சூழலில், புதிய வழக்குகளின் விசாரணைக்குத் தேவைப்பட்டால் பிஎன்எஸ்எஸ் (BNSS) சட்டப்பிரிவு 35(3)-ன் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் மறுப்பு:

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “முன்ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலையில் இன்னமும் முறைப்படி சரணடைந்து முன்ஜாமீன் பெறாமல், தங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது எனக் கோர முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும், மற்ற வழக்குகள் தொடர்பாகப் பொத்தாம் பொதுவாகவும், முன்கூட்டியே சந்தேகத்தின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version