சிறப்பு வணிக மற்றும் நிர்வாகச் செய்திப் பிரிவு
மத்திய அரசுத் துறைகளில் அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், பொதுப்பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் ‘ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார்’ (One Officer, One Official Car) என்ற புதிய கடுமையான கொள்கையை மத்திய நிதியமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை (Department of Expenditure) இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.
புதிய விதியின் முக்கிய அம்சங்கள்:
- கூடுதல் பொறுப்பு வகித்தாலும் ஒரே கார்தான்:கார் வசதி பெறத் தகுதியுள்ள ஒரு அரசு அதிகாரி, தனது சொந்தத் துறையைத் தவிர்த்து மற்றொரு அமைச்சகம், அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்புகளை வகிக்கும் பட்சத்தில், அவருக்குக் கூடுதலாக மற்றொரு அரசு கார் ஒதுக்கப்பட மாட்டாது. அவர் ஏற்கெனவே தமக்கு ஒதுக்கப்பட்ட காரையே பயன்படுத்த வேண்டும்.
- பொதுத்துறை நிறுவன வாகனங்களுக்குத் தடை:அதிகாரப்பூர்வ அரசுப் பணிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயணங்களைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட/கூடுதல் பயன்பாட்டிற்கு வைத்திருக்கக் கூடாது.
- உபரி வாகனங்கள் பாதுகாப்பு:பயன்பாட்டில் இல்லாத அல்லது உபரியாக உள்ள அரசு வாகனங்களை விருப்பம்போலப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அந்த வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்க அமைச்சகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் நோக்கம் என்ன?
- நிதி சிக்கனம்: இரட்டை வாகன ஒதுக்கீட்டைத் தடுப்பதன் மூலம் தேவையற்ற எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாகக் குறையும்.
- முறைகேடுகள் தடிப்பு: அரசு வாகனங்கள் முறைகேடாகவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கோ பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துதல்.
- வெளிப்படையான நிர்வாகம்: அரசு வளங்கள் அனைத்தையும் சீரான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருதல்.


