சென்னை, மார்ச் 5:
எதிர்வரும் 06.03.2026 வெள்ளிக்கிழமை நடைபெறும் சுபமுகூர்த்த தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு கடிதம் எழுதி அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுபமுகூர்த்த நாளில் அதிக பதிவு
சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வாஸ்து நாட்களில் பொதுமக்கள் புதிய வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கி ஆவண பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் அந்த நாட்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய முன்பதிவு டோக்கன்களுக்கு அதிக தேவை ஏற்படுகிறது.
டோக்கன் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்பு
பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல சார் பதிவாளர் அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் வழங்கப்படும் டோக்கன்கள் போதுமானதாக இல்லாததால் பல பொதுமக்கள் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.
கூடுதல் டோக்கன் வழங்க வேண்டுகோள்
எனவே பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, சுபமுகூர்த்த தினங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் முன்பதிவு டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ஹென்றி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பொதுமக்களின் தேவைகள் நிறைவேறுவதுடன், பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டோக்கன் பற்றாக்குறை நிலவும் சார் பதிவாளர் அலுவலகங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து கூடுதல் டோக்கன்களை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

