இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய பாபா சாஹேப் (மதிப்பிற்குரிய தந்தை) என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி விடுத்துள்ள சிறப்புச் செய்தி.

1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்த அம்பேத்கர், இளமை முதலே தீண்டாமை எனும் கொடுமையால் பல அவமானங்களைச் சந்தித்தார். அன்றைய காலத்தில் குடிநீர், கல்வி, வசிக்கும் இடம் என அனைத்திலும் பாகுபாடு நிலவிய சூழலில், கல்வி மட்டுமே ஒரு சமூகத்திற்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து உறுதியுடன் கற்றார்.

கல்வியே பேராயுதம் வறுமை என்பதனை நன்கு உணர்ந்து கொண்ட அம்பேத்கர் அவர்கள் எவ்விலை கொடுத்தேனும் கல்வியை கற்றே தீர வேண்டும் என்கின்ற மன உறுதியோடு சமூகத் தடைகளைத் தாண்டி, எல்பின்சுடேன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 1907 ஆம் ஆண்டு தனது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு பட்டபடிப்பிற்காக பம்பாய் பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் 1912 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

1913 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா மன்னர் சயாசிராவ் கெய்க்வாட் நிறுவிய திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற உதவித் தொகையினை கொண்டு நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் முதுகலை கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் வரலாறு தத்துவம் மானுடவியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று, பண்டைய இந்திய வர்த்தகம் என்கின்ற தலைப்பில் தனது இரண்டாவது முதுகலை ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப் படிப்பில் சேர்ந்தார். அதேநேரம் லண்டன் பொருளாதார பள்ளியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு பணியாற்றத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு கிடைத்து வந்த உதவித்தொகையானது நிறுத்தப்பட்டதால் இந்தியா திரும்பினார். 1923-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அம்பேத்கர் அதே ஆண்டு சட்ட அமைப்பால் வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். 1923 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் தன் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

உயர்கல்வி கற்றிருந்தாலும், பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும், பேராசிரியராக பணிபுரிந்தாலும் தீண்டாமை எனும் பெரும் தீயின் முன்பு அனைத்தும் கருகி அவமானம் ஒன்றே மிஞ்சியது கண்டு அறிவர் அம்பேத்கர் மனம் கொதித்தார்.

எனவே தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அறிவர் அம்பேத்கர் அவர்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். மகாத் சத்யாகிரகம் பொதுக் குளத்தில் நீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினார். மனுதரும எரிப்பு, ஜாதியப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் நூல்களை எரித்துச் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைமைச் சிற்பியாகவும் திகழ்ந்தார்.

” மேலும் பெண்கள் முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன் என்று வரியின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்தி உள்ளார்.

அதுபோல நல்ல புத்தகங்கள் படிப்பதைப் குறித்து குறிப்பிடும் போது, உங்களிடம் இரண்டு ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் உணவுக்கும். ஒரு ரூபாய் புத்தகத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் உணவு நீங்கள் வாழ உதவும், ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை புத்தகம் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

மேலும் அறிவர் அம்பேத்கர் அவர்கள் வீரத்தை குறித்து குறிப்பிடுகையில், பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள் எனவும், சுய மரியாதை குறித்து குறிப்பிடுகையில், ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம் எனவும், லட்சியம் குறித்து குறிப்பிடுகையில், ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் எனவும், கடமை குறித்து குறிப்பிடுகையில், வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் எனவும், சுதந்திர மனிதன் குறித்து குறிப்பிடுகையில், எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன் என இது போல் பல கருத்துக்களை சிறப்பான வாழ்க்கைக்கான வழிமுறைகளை அறிவர் அவர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

அறிவர் அம்பேத்கர் அவர்களின் ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டி, அவருக்கு 1990-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இன்றும் நாட்டின் மறைக்க முடியாத ஆளுமையாகயும், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவரது சிந்தனைகளே முன்னோடியாகத் திகழ்கின்றன.”எழுத்தாலும், பேச்சாலும், களப்போராட்டத்தாலும் இம்மண்ணுக்கும் மக்களுக்குமான மகத்தான தலைவராகத் திகழ்ந்த அறிவர் அம்பேத்கர் அவர்களை அவரது பிறந்த நாளில் போற்றி வணங்குவோம். ஜெய் பீம்!” என டாக்டர் ஆ. ஹென்றி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version