சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் சென்னையில் நடைபெற்ற ‘Start Run, Stop Drugs’ மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடினார். முதலமைச்சரின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், “நேற்று காலையில் முதலமைச்சர் விஜய் சார் மாரத்தானில் 3 கிலோமீட்டர் தூரம் ஓடிய வீடியோவைப் பார்த்தேன். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் (Positive) இருந்தது. பொதுவாக ஒரு முதலமைச்சர் என்றால் கொடியசைத்து மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், அவர் களத்தில் இறங்கி மக்களுடன் ஓடியது வியப்பாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “50 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதலமைச்சர், இளைஞர்களுடன் இணைந்து 3 கி.மீ ஓடும்போது, அது ஆரோக்கியமான வாழ்வு முறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது. ‘போதைப்பொருளுக்கு நோ சொல்லுங்கள்’ என்ற செய்தியைச் சொல்ல, அவர் தேர்வு செய்த இந்த வழி மிகவும் நேர்மறையானது. இத்தகைய செயல்பாடுகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version