சென்னை: சின்னத்திரையின் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான மனோகரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியலான ‘ஈரமான ரோஜாவே’ (பாகம் 1 மற்றும் 2) குழுவினர் ஒட்டுமொத்தமாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவி சீரியல்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் மனோகர். இவருடைய மகன் திருமண விசேஷத்திற்குச் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ரீ-யூனியன் கொண்டாடிய சீரியல் குழுவினர்
‘ஈரமான ரோஜாவே’ தொடர் முடிவடைந்தாலும், அதில் நடித்த நடிகர், நடிகைகள் இன்றும் தங்களது நட்பைத் தொடர்ந்து வருகின்றனர். அதற்குச் சான்றாக, நடிகர் மனோகரின் அழைப்பை ஏற்று இத்தொடரின் முக்கிய நட்சத்திரங்களான திரவியம், கேப்ரியல்லா, தீபக், சாய் காயத்ரி மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் பிரான்சிஸ் கிருபா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்தத் திருமண விழாவில் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தத் திருமண மேடையில் ‘ஈரமான ரோஜாவே’ குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டதால், அந்த இடமே ஒரு மினி ரீ-யூனியன் போலக் காட்சியளித்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டும், குழுவாகப் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
தங்களது ஃபேவரிட் சீரியல் பிரபலங்கள் அனைவரும் ஒரே பிரேமில் இருக்கும் அழகிய புகைப்படங்களைத் திரவியம் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
“எப்பவுமே நாங்க ஒரு குடும்பம் தான்!” என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் ரசிகர்கள் தங்களது லைக்குகளைக் குவித்து, மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


