“பி டீம் பிம்பம் உருவாக்குவது திமுகதான்” – விஜய்க்கு ஆதரவாகவும், கொள்கை ரீதியாக எதிராகவும் சீமான் காட்டம்!
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, விஜய் மீதான வழக்குப் பதிவு மற்றும் திமுகவின் ‘இலவச’ வாக்குறுதிகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சீமான் செய்தியாளர் சந்திப்பின் ‘Top-10’ அதிரடி பாயிண்டுகள்:
- விஜய் மீதான வழக்கு: கொளத்தூரில் பிரச்சாரம் செய்த விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய அவர், “பாதுகாப்புக் குறைபாடு குறித்துத் தம்பி விஜய்தான் விளக்க வேண்டும். நான் காவல்துறையிடம் பாதுகாப்பு கோருவதும் இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை” என்றார்.
- ஏ டீம் – பி டீம் சர்ச்சை: “பாஜகவின் பி டீம் என ஒரு பிம்பத்தை திமுக உருவாக்குகிறது. ஆனால், பாஜக வேரூன்றக் காரணமே திமுகதான். 90% இந்துக்கள் என் கட்சியில்தான் உள்ளனர் எனச் சொன்ன திமுகதான் உண்மையான ஏ டீம்” எனச் சாடினார்.
- இலவசங்கள் Vs வாக்குறுதிகள்: “திமுக அறிவித்துள்ளது வாக்குறுதிகள் அல்ல, வெறும் இலவசங்கள். தரமான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு தருவதுதான் உண்மையான வாக்குறுதி. சிலிண்டரும், பணமும் தருவது மக்களை ஏமாற்றும் செயல்” எனக் குறிப்பிட்டார்.
- கல்விக் கடன் விமர்சனம்: “பிள்ளைகளைப் படிக்க வைப்பது அரசின் கடமை. அதற்கு 20 லட்சம் கடன் கொடுத்து மாணவர்களைக் கடனாளியாக்குவது என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
- தமிழகக் கடன் சுமை: தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியைத் தாண்டப்போகிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே பட்ஜெட் காலியாகிறது, அப்புறம் எப்படி அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பீர்கள்? என வினவினார்.
- மது ஒழிப்பு: “ஒரு பக்கம் தாலியை அறுத்துவிட்டு, மறுபக்கம் குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் கொடுப்பது என்ன மாதிரியான நிர்வாகம்? தம்பி விஜயாவது தான் வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் எனச் சொல்கிறாரா?” என இரு தரப்பையும் வம்புக்கு இழுத்தார்.
- 2000 Vs 2500 போட்டி: “திமுக 2000 தருகிறது, விஜய் 2500 தருகிறேன் என்கிறார். அப்படியானால் இது வெறும் பணத்திற்கான போட்டிதானே தவிர, கொள்கைக்கான போட்டி இல்லை” என விமர்சித்தார்.
- வளங்கள் கொள்ளை: “மணல், மலை என இயற்கை வளங்களை அண்டை மாநிலங்களுக்கு விற்று நாட்டைச் சுடுகடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் யாரும் கேட்பதில்லை?” என ஆதங்கப்பட்டார்.
- சட்டம் – ஒழுங்கு: “மதுவைத் திறந்து வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது அர்த்தமற்றது” என்றார்.
- மக்களுக்கான அழைப்பு: “நம் கண் முன்னே வளங்கள் கொள்ளை போவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் சாபம் பெற்ற மக்கள். அந்தச் சாபத்தை மாற்றவே நாங்கள் போராடுகிறோம்” என முடித்தார்.

