சென்னை: தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்தவும், பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் வேகமான சேவைகளை வழங்கவும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதிய ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தற்போதைய ‘STAR 3.0’ திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, ‘STAR 4.0’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மேம்படுத்த வேண்டும் என அரசுக்குக் கொள்கை ஆலோசனை வரைவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
முக்கிய பரிந்துரைகள்:
இந்த வரைவில் உலக நாடுகளின் நிலப்பதிவு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு 15 முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில:
- ஒருங்கிணைந்த சொத்து தகவல் தளம்: ஒரு சொத்தின் உரிமை வரலாறு, வழிகாட்டி மதிப்பு, கட்டிட அனுமதி, நீதிமன்ற வழக்குகள் மற்றும் வரி நிலுவைகள் என அனைத்தையும் ஒரே திரையில் அறியும் வசதி.
- Property Passport: ஒவ்வொரு சொத்திற்கும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண் வழங்கி, போலி ஆவணங்களைத் தடுக்கும் முறை.
- AI மற்றும் Blockchain பயன்பாடு: செயற்கை நுண்ணறிவு மூலம் முறைகேடுகளைத் தானாகவே கண்டறிதல் மற்றும் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் மூலம் ஆவணங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு அளித்தல்.
- 10 நிமிடங்களில் பதிவு: அங்கீகரிக்கப்பட்ட மனைகள் மற்றும் குடியிருப்புகள் போன்ற குறைந்த அபாயம் கொண்ட சொத்துப் பதிவுகளை வெறும் 10 நிமிடங்களில் முடிக்கும் ‘Instant Registration’ முறை.
- NRI-க்களுக்கான வசதி: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், Video KYC மற்றும் மின்னணு கையொப்பம் மூலம் அங்கிருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் வசதி.
- GIS வரைபட ஒருங்கிணைப்பு: கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பத்தில், நில எல்லைகள், சாலை அகலம் மற்றும் மாஸ்டர் பிளான் தகவல்களை பொதுமக்கள் சரிபார்க்கும் வசதி.
நடைமுறை சிக்கல்களுக்கான தீர்வுகள்:
இவை தவிர, பதிவேற்றப்படும் ஆவணங்களின் அளவை அதிகரித்தல், 1975-க்கு முந்தைய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், TNRERA எண் குறிப்பிடுதல் மற்றும் பாகப்பிரிவினை ஆவணங்களில் வாரிசுகளுக்கான கூடுதல் நகல் வசதி உள்ளிட்ட 16 தொழில்நுட்பச் சீர்திருத்தங்களையும் FAIRA அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அரசின் இலக்கிற்கு வலுசேர்க்கும் திட்டம்:
“தமிழக அரசு ஏற்கனவே ‘STAR 3.0’ மூலம் காகிதமில்லா பதிவு முறையை முன்னெடுத்துள்ளது. இதில் இந்த மேம்பட்ட அம்சங்களை இணைப்பதன் மூலம், ‘Ease of Living’ (எளிதான வாழ்க்கை), ‘Ease of Doing Business’ (எளிதான தொழில் சூழல்) மற்றும் ‘Transparent Governance’ (வெளிப்படையான நிர்வாகம்) ஆகிய அரசின் மூன்று முக்கிய இலக்குகளை ஒரே நேரத்தில் அடைய முடியும்” என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது வரைவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாடு பதிவுத்துறை இந்தியாவிலேயே முதன்மையானதாகவும், உலகின் சிறந்த டிஜிட்டல் நிலப்பதிவு அமைப்பாகவும் மாறும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


