இந்திய எல்லைகளை காக்கும் இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் சுப்பிரமணி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, பட்டிவீரன்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், கரூர், கொடைக்கானல் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
வத்தலகுண்டு நகரின் அடையாளமான காளியம்மன் கோவில் முன்பாக தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்வகுமார் கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார். கார்டன் லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் கென்னடி முன்னிலை வகித்து வீரர்களை ஊக்குவித்தார்.
சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான், காளியம்மன் கோவிலில் இருந்து பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி வளாகம் வரை நடைபெற்றது. பாதை முழுவதும் பொதுமக்கள் வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினர் பங்கேற்று, உடல் நல விழிப்புணர்வு மற்றும் தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.
இலக்கை அடைந்தவர்களுக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சான்றிதழ்கள் வழங்கினர். இளைஞர்களிடையே ஒற்றுமை, உடல் உறுதி மற்றும் தேசப்பற்று வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது
மாரத்தான் போட்டி ஒருங்கிணைப்பை முத்துக்கணேஷ் மேற்கொண்டார்.

