சென்னை: கவின் ஆணவப்படுகொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயாரைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ள நடவடிக்கைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சாதி மறுப்புத் திருமணப் படுகொலை வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
காவல்துறைக்கு திருமாவளவன் பாராட்டு: இந்த கைது நடவடிக்கை குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவின் ஆணவப்படுகொலை வழக்கில், முக்கியச் சதிகாரர்களில் ஒருவராகக் கருதப்பட்டு தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயாரைக் காவல்துறை விரைந்து செயல்பட்டுக் கைது செய்திருப்பது வரவேற்புக்குரியது. இந்தச் துணிச்சலான நடவடிக்கைக்காகத் தமிழக காவல்துறைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆணவக் கொலைகள் போன்ற சமூகக் கொடூரங்களுக்குப் பின்னால் இருக்கும் சதிகாரர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க, மாநில அரசு உடனடியாகத் தனிச் சட்டம் (ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்) இயற்ற வேண்டும் என்றும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இக்கொலை வழக்கில் காவல்துறையின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் தளத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.


