கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க காத்திருந்த இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் இந்த சரிவை வரவேற்று வருகின்றனர்.
இன்றைய நிலவரப்படி, நேற்று ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து ரூ.14,970-ஆக உள்ளது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் குறையும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீது இருந்த முதலீடுகள் சில அளவில் குறைந்து பங்குச் சந்தைகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கமே இந்திய சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. இருப்பினும் உலகளாவிய பொருளாதார நிலை மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தே வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய இந்த விலை சரிவு, விரைவில் நடைபெறவுள்ள திருமணங்கள் மற்றும் விழாக்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.


