பெய்ஜிங்: விண்வெளி ஆய்வில் வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாகத் தீவிரமாகக் களம் இறங்கியுள்ள சீனா, தனது லட்சிய திட்டமான ‘மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்’ இலக்கை நோக்கிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 3 விண்வெளி வீரர்களுடன் ‘ஷென்சோ-23’ (Shenzhou-23) விண்கலத்தைச் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளது.
தியாங்காங் விண்வெளி நிலையத்திற்குப் பயணம்:
சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் (Jiuquan) விண்கல ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-2எஃப் (Long March-2F) ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்டுள்ள 3 விண்வெளி வீரர்களும், விண்வெளியில் சீனா அமைத்துள்ள ‘தியாங்காங்’ (Tiangong Space Station) விண்வெளி நிலையத்திற்குச் சென்று, அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் வீரர்களுக்குப் பதிலாகப் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
2030 நிலவு திட்டத்தின் முக்கியப் படி:
விண்வெளித் துறையில் அமெரிக்காவின் நாசாவுக்கு (NASA) இணையாகச் சீனா பல அதிரடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பிரம்மாண்ட திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது.
தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ‘ஷென்சோ-23’ விண்கலத்தின் பயணம், மனிதர்கள் நிலவில் நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும், விண்வெளி வீரர்களின் உடல்நிலைத் தாங்குதிறன் குறித்தும் ஆராய்வதற்கான மிக முக்கியப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் பார்வை:
முழுக்க முழுக்கத் சொந்தத் தொழில்நுட்பத்தில் சீனா இந்த விண்கலத்தையும், விண்வெளி நிலையத்தையும் இயக்கி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ‘ஷென்சோ-23’ திட்டத்தின் மூலம் விண்வெளியில் சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்துள்ளதாக சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


