சென்னை: அண்ணா நகரில் சாலையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவிக்கு உதவி செய்த சம்பவம் தற்போது சட்ட, தனியுரிமை விவகாரமாக மாறியுள்ளது. உதவி செய்த காட்சியை அவரது அனுமதி இன்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக யூடியூபர் பால விக்னேஷ் மீது மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் பயணத்தின் போது நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து வெளியிட்டு வரும் பால விக்னேஷ், கடந்த வாரம் அண்ணா நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நடந்து சென்ற கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அதைப் பார்த்த மாணவியும், அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல். தங்களின் அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக கூறி, அதை நீக்குமாறு யூடியூபரிடம் கேட்டதுடன், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

தனியுரிமை vs மனிதநேயம்

பொது இடத்தில் ஒருவர் மயங்கி விழுந்தால் உதவி செய்வது மனிதநேயமான செயல். ஆனால் அந்த நிலையை அவரது அனுமதி இன்றி படம் பிடித்து வெளியிடுவது, தனிமனித உரிமை மற்றும் கண்ணியத்தை பாதிக்கும் செயலாக கருதப்படலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர் பெண் என்பதால், சம்பவம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘உதவி’ சம்பவங்களை பகிரும் போது அனுமதி மற்றும் தனியுரிமை முக்கியம் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version